அ.தி.மு.க. நகர செயலாளர் உள்பட 2 பேரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்


அ.தி.மு.க. நகர செயலாளர் உள்பட 2 பேரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 11:06 PM GMT)

அ.தி.மு.க. நகர செயலாளர் உள்பட 2 பேரிடம் இருந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.1¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் சுந்தரவடிவேல் மற்றும் அதிகாரிகள், போலீசார்கள் பூங்கொடி, கருப்பசாமி ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் டி.கல்லுப்பட்டியில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு டி.கல்லுப்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ரூ.1 லட்சம் மற்றும் பூத் சிலிப்புகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாலசுப்பிரமணியனிடம் விசாரித்து கொண்டிருந்தபோது அவர் தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோன்று கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னஉலகாணி கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு ரோந்து சென்றபோது, அதே ஊரை சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் மயில் (வயது 55) என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அ.தி.மு.க. பிரமுகர் மயிலை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்த ரூ.22 ஆயிரத்து 400ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியில், மாநகராட்சி 82-வது வார்டு அ.தி.மு.க. அலுவலகம் உள்ளது. 82-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக தேவதாஸ் உள்ளார். இந்த அலுவலகத்தில் அவர் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று பகலில் அங்கு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.19 ஆயிரத்து 100-ஐயும், வாக்காளர் பட்டியலையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story