தூத்துக்குடி தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்


தூத்துக்குடி தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:00 PM GMT (Updated: 18 April 2019 7:06 PM GMT)

தூத்துக்குடி தொகுதியில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தொகுதியில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் கடந்த 16-ந் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,595 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நேற்று முன்தினம் இரவு முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.

நீண்ட வரிசையில்...

ஆனாலும் தூத்துக்குடி தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் குடும்பத்தோடு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் உப்பு கரைசல் வழங்கப்பட்டது.

வாக்காளர் சீட்டு வழங்குவதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து பணியாற்றினார். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். ஊனமுற்றவர்கள், முதியவர்கள் தங்களது உறவினர்களின் உதவியோடு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.

கலெக்டர் ஓட்டு போட்டார்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 10-30 மணியளவில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கடம்பூர் ராஜூ, கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. காலை 7-30 மணியளவில் போல்பேட்டையில் உள்ள கீதா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். உடன்குடி அருகே தண்டுபத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வாக்களித்தார். ஏரல் அருகே பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளியில் அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. வாக்களித்தார். காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகம்மது அபுபக்கர் வாக்களித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் பொன்குமரன் தூத்துக்குடி டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

4 ஆயிரம் போலீசார்

தேர்தலையொட்டி சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி இருந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு மந்தமாக தொடங்கியது. ஆனால் அதன்பிறகு இந்த 3 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு சூடுபிடித்தது. தொடர்ந்து ஓட்டுப்பதிவு சதவீதம் மளமளவென உயர்ந்தது. தூத்துக்குடி தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது.

Next Story