விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 78.06 சதவீதம் வாக்குப்பதிவு


விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 78.06 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 April 2019 3:30 AM IST (Updated: 19 April 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 78.06 சதவீதம் வாக்குகள் பதிவானது.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 78.06 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தலுடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தொகுதி முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

வேட்பாளர்கள்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், கீழ விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் அயன் பொம்மையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமணி விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. முகவருக்கும், சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயனின் முகவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் சமாதானப்படுத்தினர்.

78.06 சதவீதம்

கமலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. அதனை தேர்தல் அலுவலர்கள் உடனே சரிசெய்தனர். இதனால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. விளாத்திகுளம் தொகுதியில் மொத்தம் 78.06 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Next Story