சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றினர்.

அரியலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம், கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 36 ஆயிரத்து 655 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 42 ஆயிரத்து 394 பேரும், இதர வாக்காளர்கள் 59 பேரும் என மொத்தம் 14 லட்சத்து 79 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இளவரசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவிற்காக சிதம்பரம் தொகுதியில் மொத்தம் 1,708 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆர்வத்துடன் வந்தனர்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் சீல்களை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் உடைத்து, அதனை ஒவ்வொன்றுடன் பொருத்தி ஓட்டுப்பதிவிற்கு தயார் நிலையில் வைத்தனர். இதையடுத்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்தனர். அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர்.

நீண்ட வரிசை

இதனால் காலையிலேயே நிறைய வாக்குச்சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்தவுடன், வி.வி.பேட் எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு மூலம் அறிந்து கொண்டனர். பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்ததால் நிறைய பேர் காலையிலேயே வந்து வாக்குப்பதிவு செய்தனர்.

வாக்களித்த தேர்தல் அதிகாரி

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாநகரம் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி நேற்று காலை வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 587 வாக்குச்சாவடி மையங்களில் காலை அடையாள மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது, என்றார்.

Next Story