வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் காங்கேயத்தில் சாலை மறியலுக்கு முயன்ற பயணிகள்

காங்கேயத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் காங்கேயம் பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியலுக்கு முயன்றனர்.
காங்கேயம்,
காங்கேயம் பகுதியில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகள், தேங்காய் எண்ணெய் ஆலைகள், தேங்காய் களங்கள், நெய் மண்டிகள் உள்ளிட்டவற்றில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினமே ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அதேபோல் நேற்றும் அதிகாலை முதலே தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் சென்றவண்ணம் இருந்தனர்.
அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் இருந்து கரூர், திருச்சி செல்லும் பஸ்களில் சென்று கொண்டிருந்த நிலையில் காலை 6.30 மணிக்கு பின்னால் காலை 10 மணிவரை கரூர், திருச்சி மார்க்கத்தில் செல்லும் எந்த ஒரு பஸ்சும் காங்கேயம் பஸ் நிலையத்திற்குள் வரவில்லை.
காலை முதலே சாப்பாடு கூட இல்லாமல் குடும்பத்தினருடன் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பஸ்கள் வராததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மறியலுக்கு முயன்றனர்.
இது பற்றிய தகவலறிந்த காங்கேயம் போலீசார் அங்கு சென்று, சாலை மறியலுக்கு முயன்றவர்களை சமாதானம் செய்தனர். அதன்பின்னர் காங்கேயம் அரசு பஸ் டெப்போவில் பேசி ஒரு பஸ்சை வரவழைத்து பயணிகளில் ஒரு பகுதியினரை அனுப்பி வைத்தனர். மேலும் ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்தில் தொடர்ந்து காத்திருந்தனர்.
இது பற்றி பயணிகள் தரப்பில் கூறும்போது, காங்கேயத்திலிருந்து கரூர், திருச்சிக்கு நேரடி பஸ் வசதி இல்லை. திருப்பூர், கோவையிலிருந்து 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் காங்கேயம் வழியாக இயக்கப்பட்டாலும் கோவையிலிருந்து காங்கேயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் பஸ்கள் கூட்டத்தை காரணம் காட்டி பஸ் நிலையத்திற்குள் வராமல் சென்றுவிட்டன.
இதனால் விலைமதிப்பில்லாத எங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே காங்கேயத்திலிருந்து கரூர், திருச்சிக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Related Tags :
Next Story






