கன்னியாகுமரி தொகுதியில் 65 சதவீதம் வாக்குப்பதிவு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


கன்னியாகுமரி தொகுதியில் 65 சதவீதம் வாக்குப்பதிவு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 9:16 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 1,694 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடிகளும் தொகுதிக்கு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

முதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்தனர். அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டதும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. இதனையடுத்து வாக்காளர்கள் பதிவேட்டில் கையொப்பம் போட்டு விட்டு தங்களது வாக்கை பதிவு செய்தனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களை காண்பித்து வாக்களித்தனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கிய போது, 20–க்கும் மேற்பட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதே போல வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட வி.வி.பேட் கருவியும் சில இடங்களில் பழுதானது. குறிப்பாக குமாரபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 2 வாக்குச்சாவடிகளில் வி.வி.பேட் கருவி பழுதானது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது.

இதற்கிடையே வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏராளமான வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஆர்வத்துடன் வந்தனர். புதிய வாக்காளர்களும் திரண்டதால் வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்னர் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் பேச்சிப்பாறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல் நிலைப்பள்ளியில் வாக்காளர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. புதிதாக வாக்களிக்க வந்த இளம் தலைமுறையினர், “ஜனநாயக கடமை ஆற்றியது பெருமையாக இருக்கிறது“ என்று கூறிச் சென்றனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி வரை ஆண்கள் கூட்டத்தை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருந்தது. மேலும் பலர் குடும்பம் குடும்பமாக வந்து வாக்களித்தனர். நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. எனினும் மக்கள் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிப்பதற்காக காத்திருந்தனர். 70 வயதை தாண்டிய முதியவர்களும் தள்ளாடியபடி வந்து வாக்களித்தார்கள். நடக்க முடியாத முதியவர்களை, அவர்களின் உறவினர்கள் சுமந்து வந்து வாக்களிக்க வைத்தனர். அந்த வகையில் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடக்க முடியாத முதியவரை அவருடைய உறவினர் ஒருவர் தூக்கி வந்து வாக்களிக்க வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பிற வாக்காளர்களும், தேர்தல் அலுவலர்களும் அந்த உறவினரை பாராட்டினர்.

அதோடு தேர்தல் நாளான நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நடந்தன. பின்னர் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் கல்யாண கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். ஆரல்வாய்மொழி, கண்ணாட்டுவிளை, கடுக்கரை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் புதுமண தம்பதியினர் ஜோடியாக வந்து வாக்களித்தார்கள். நடக்க முடியாத மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்களது வீல் சேர் மூலம் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். குமாரபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வந்த மாற்றுத் திறனாளி ஒருவர், தனது வீல் சேர் மூலம் உள்ளே செல்ல இயலவில்லை. ஏன் எனில் வாக்குச்சாவடிக்குள் செல்ல படிக்கட்டுகள் இருந்ததால் அவர் உள்ள செல்ல முடியாமல் தவித்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் உடனே அந்த மாற்றுத் திறனாளியை வீல் சேருடன் தூக்கி வாக்குச்சாவடிக்குள் அனுப்பி வைத்தனர்.

இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகளை வாகனங்கள் மூலமாக வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர். இதற்காக 3 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குமரி மாவட்டத்தில் காலையில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்திருந்தாலும் மதியத்துக்கு பிறகு நிலைமை தலைகீழானது. அதாவது மதியம் 2 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு மந்தம் அடைந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக திருவிதாங்கோடு, தக்கலை, குலசேகரம், பேச்சிப்பாறை, மணக்குடி, வில்லுக்குறி, குளச்சல், மண்டைக்காடு, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாலை 4 மணிக்கு பிறகு வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் யாருமே செல்லாததால் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் மட்டுமே இருந்தனர்.

அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்கு பிறகும் வாக்காளர்கள் காத்திருந்தனர். ஆனால் அனைவரும் 6 மணிக்கு முன்பே வந்தவர்கள் என்பதால் அவர்கள் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனால் வாக்களிக்கும் நேரம் இரவிலும் நீண்டு கொண்டே சென்றது. இதன் காரணமாக கன்னியாகுமரி தொகுதியில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் உறுதியாக தெரியவில்லை.

இதுபற்றி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்டபோது, “கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் உறுதியான தகவல் நாளை (அதாவது இன்று) காலை தான் தெரியவரும்“ என்றார்.

குமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும் பல இடங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

இதுபோக பதற்றமான 208 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்களும் பணி அமர்த்தப்பட்டு இருந்தார்கள். அதோடு போலீஸ் உயர் அதிகாரிகளும் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். வாக்குச்சாவடிகளுக்குள் தேர்தல் அலுவலர்களின் வாகனங்களை தவிர எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் தங்களது வாகனங்களை வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தி விட்டு வந்து வாக்களித்தனர்.


Next Story
  • chat