விருதுநகர் மாவட்டத்தில், 17 வாக்கு காகித சரிபார்ப்பு எந்திரங்கள் மாற்றப்பட்டன - கலெக்டர் சிவஞானம் தகவல்


விருதுநகர் மாவட்டத்தில், 17 வாக்கு காகித சரிபார்ப்பு எந்திரங்கள் மாற்றப்பட்டன - கலெக்டர் சிவஞானம் தகவல்
x
தினத்தந்தி 18 April 2019 9:43 PM GMT (Updated: 18 April 2019 9:43 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப் பதிவின் போது 7 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 17 வாக்குப்பதிவு காகித சரிபார்ப்பு எந்திரங்களும் மாற்றப்பட்டதாகவும், வாக்குப்பதிவு தொடர்பாக வேட்பாளர்களிடம் இருந்து புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என்றும் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் சிவஞானம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது பழுது ஏற்பட்டதன் காரணமாக 7 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 17 வாக்கு சரிபார்ப்பு காகித எந்திரங்களும் மாற்றப்பட்டன. தட்பவெப்பநிலை காரணமாக வாக்கு சரிபார்ப்பு காகித எந்திரங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டது. எனினும் பழுதான எந்திரங்களும் மாற்றப்பட்ட எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணப்படும் வரை பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையமான விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்படும். இதே போன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் இடமான விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப்பதிவு நடந்த 14 வாக்குச் சாவடிகளில் முழுவதுமாக பெண்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதில் விருதுநகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் கடந்த தேர்தலைவிட 14 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளன. ராஜபாளையத்திலும், சாத்தூரிலும் உள்ள 2 பெண்கள் வாக்குச்சாவடியில் 2 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருந்தது. மற்ற 11 வாக்குச்சாவடிகளிலும் குறைவாகவே வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தல் புறக்கணிப்பு நடந்த மீனாட்சிபுரத்தில் அதிகாரிகள் சமரசத்திற்கு பின்பு 82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

சாத்தூரில் அ.ம.மு.க. வேட்பாளர் உறவினர் இடத்தில் இருந்து ரூ.43 லட்சம் பறிமுதல் செய்தது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்று வருமானவரி துறையினரும் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது எந்திரங்கள் பழுது தொடர்பாக மட்டுமே புகார்கள் வரப்பட்டன. வேட்பாளரிடம் இருந்தோ, வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடம் இருந்தோ வாக்குப்பதிவு தொடர்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை.

இதே போன்று வாக்குப்பதிவின்போது தகுந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. 100 சதவீத வாக்குப்பதிவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் குறைந்த பட்ச வாக்குகள் பதிவாகி உள்ளதற்கு தொகுதி மக்கள் தான் பதில் தெரிவிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலைவிட தற்போது 4 சதவீதம் குறைவாகவே வாக்குப்பதிவாகி உள்ளது. மாநில சராசரியை விட விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் உடனிருந்தார்.

Next Story