பூந்தமல்லியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார், அ.ம.மு.க.-தி.மு.க. போராட்டம்


பூந்தமல்லியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார், அ.ம.மு.க.-தி.மு.க. போராட்டம்
x
தினத்தந்தி 18 April 2019 11:38 PM GMT (Updated: 18 April 2019 11:38 PM GMT)

ஆவடி அருகே பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணப்பாளையத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து அ.தி.மு.க. கள்ள ஓட்டு போட்டதாக வாக்குப்பதிவு எந்திரங்களை எடுக்க விடாமல் அ.ம.மு.க. மற்றும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆவடி அருகே பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணப்பாளையம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தி.மு.க. முகவர் வெளியே வந்ததாகவும், அப்போது அங்கு வந்த அ.ம.மு.க.வினர் வாக்குச்சாவடிக்குள் சென்று பார்த்தபோது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட்டுக்கொண்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதனால் அங்கு தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் அதிகளவில் ஒன்று திரண்டு, வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

அப்போது அ.ம.மு.க.வினர், “இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 1,117 வாக்குகள் உள்ளன. அதில் 858 வாக்குகள் பதிவானதாக அனைத்து கட்சியினரும் முடிவு செய்தனர். இதற்கிடையில் வாக்குச்சாவடிக்குள் அ.தி.மு.க.வை சேர்ந்த நபர் இருந்ததால் சந்தேகத்தின்பேரில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்த்த போது எம்.எல்.ஏ. தொகுதிக்கு 37 வாக்குகளும், நாடாளுமன்ற தொகுதிக்கு 27 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி உள்ளது. அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டு உள்ளனர். எனவே இந்த வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்று கூறி வாக்குப்பதிவு எந்திரங்களை எடுக்க விடாமல் தடுத்து வருகின்றனர்.

இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story