தொடர் விடுமுறை எதிரொலி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


தொடர் விடுமுறை எதிரொலி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 20 April 2019 4:15 AM IST (Updated: 19 April 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி‘ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் 2-வது வாரம் வரை கொடைக்கானலில் சீசன் களை கட்டும்.

இதன்படி இந்த ஆண்டு தற்போது குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது. அத்துடன் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை உள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் ஏரிச்சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வழியில் கோசன்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளும், அங்கு கடை வைத்திருப்பவர்களும் பொதுமக்களும் இணைந்து மரத்தை அகற்றினர்.

இதனால் அனைத்து வாகனங்களும் அப்பகுதியில் ஒரு மணி நேரம் காத்துக் கிடந்தன. அத்துடன் போதிய போலீசார் இல்லாத காரணத்தால் வாகனங்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வந்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுற்றுலா இடங்களை நாளை முதல் ஒரு வழிப்பாதையாக அறிவிக்க வேண்டும் என்றும், கனரக வாகனங்கள் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா இடங்கள் களைகட்டின. மோயர்பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பிரையண்ட் பூங்கா, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர சைக்கிள் சவாரி, படகுசவாரி, குதிரை சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

இருந்தபோதிலும் கொடைக்கானல் நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருந்த போதிலும் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக கொடைக்கானல் களைகட்டி உள்ளது.

Next Story