சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு


சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 20 April 2019 3:45 AM IST (Updated: 19 April 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.

அரியலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடந்தது. இதில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 77.72 சதவீதம் வாக்குகள் பதிவானது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்தபிறகு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மொத்தம் 1,708 வாக்குச்சாவடி மையங்களில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங் கள் (வி.வி.பேட்), கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஆகியவை வாக்குச்சாவடி அலுவலர்களால் ‘சீல்‘ வைக் கப்பட்டன. பின்னர் அந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம், தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அந்த எந்திரங்கள் அனைத்தும் கல்லூரியில் உள்ள தனித்தனி பாதுகாப்பு அறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வரிசையாக தேர்தல் அலுவலர்கள் அடுக்கி வைத்தனர். இதையடுத்து நேற்று காலை சிதம்பரம் தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி மற்றும் அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் ‘சீல்‘ வைத்தனர். அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி தான் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. இதனால் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த மையத்தை மத்திய துணை ராணுவ படைவீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Next Story