கோவை அருகே, ஒர்க்ஷாப் அதிபரை கொலை செய்தது கூலிப்படையா? போலீசார் விசாரணை

கோவை அருகே ஒர்க்ஷாப் அதிபரை கொன்றது கூலிப்படையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போத்தனூர்,
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 37). இவர் செட்டிப்பாளையம் அருகே ஈஸ்வரன் நகர் பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் ஒக்ஷாப் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை ஒர்க்ஷாப்புக்குள் பரந்தாமன் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒர்க்ஷாப்பில் வேலை செய்த 3 பேரை அடித்து உதைத்து அங்கிருந்த ஒரு அறையில் அடைத்தனர். அதன்பின்னர் அந்த கும்பல் பரந்தாமனின் அறைக்குள் புகுந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதன்பின்னர் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினர். மேலும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்யும் கருவியையும் மர்ம கும்பல் எடுத்துச் சென்று விட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த தடயங்களை அவர்கள் சேகரித்தனர். ஆனால் அதில் துப்பு எதுவும் துலங்கவில்லை. இதைத்தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதில் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று என்பது பற்றி துப்பு துலங்கவில்லை. இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறிய தாவது:-
ஒர்க்ஷாப் அதிபர் பரந்தாமன் கொலையை பார்க்கும் போது கூலிப்படையினரின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலையாளிகள் 5 அல்லது 6 பேர் வந்திருக்கலாம் என்றும் இந்த கொலை சம்பவம் திட்டமிட்டு எந்தவித தடயங்களும் சிக்காத அளவிற்கு கச்சிதமாக நடந்துள்ளதால் கூலிப்படையினர் இதை செய்திருக்கலாம் என்று உறுதியாக தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய விலை உயர்ந்த கார்களை பரந்தாமன் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் இந்த தொழிலில் அவருக்கு விரோதிகள் யாரும் இல்லை என்று தெரியவந்துள்ளது. எனவே பரந்தாமன் இதற்கு முன்பு நடத்திய நிதி நிறுவன தொழிலில் ஏற்பட்ட பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந் துள்ளது.
கொலைக்கான காரணம் தெரிந்தால் தான் கொலையாளிகள் யார் என்று அனுமானிக்க முடியும். எனவே முதலில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஒர்க்ஷாப்பிற்கு வெளியே உள்ள கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா? அதில் கொலையாளிகளின் உருவம் பதிவாகியிருக்கிறதா? என்றும் மற்றொரு தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். எனவே ஒர்க்ஷாப் அதிபர் கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதால் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






