பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: மாவட்டத்தில் 91.63 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: மாவட்டத்தில் 91.63 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 April 2019 4:45 AM IST (Updated: 20 April 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.63 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, மத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 560 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் 17 ஆயிரத்து 922 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.63 சதவீதம் ஆகும்.

தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 344 பேரில் 3 ஆயிரத்து 871 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.11 சதவீதம் ஆகும். ஓசூர் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 852 பேர் தேர்வு எழுதியதில், 4 ஆயிரத்து 381 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.29 சதவீதம் ஆகும். கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 597 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 28 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.83 சதவீதம் ஆகும். மத்தூர் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 767 பேர் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 642 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.38 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு 87 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 91.63 சதவீதம் ஆகும். 4.63 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 4.63 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. தெலுங்கு, கன்னட மொழிப்பாட பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக தெலுங்கு, கன்னட மொழி மாணவர்களுக்கு என்று சிறப்பு பாட தொகுப்புகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அதன் விளைவாக மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகளும், 44 தனியார் பள்ளிகளும் என 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

Next Story