தொடர் விடுமுறை, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்த்து விட்டு, கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்புவார்கள். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு, நேற்று புனித வெள்ளி, தொடர்ந்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண்பதற்காக படகில் செல்ல ஆவலுடன் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பார்த்து ரசித்தனர். கடல் நீர்மட்ட தாழ்வு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.
இதேபோல் காந்திமண்டபம், காமராஜர் மணிமண்டபம், பூங்கா, அரசு பழத்தோட்டம் என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
Related Tags :
Next Story