தஞ்சை அருகே, ரோட்டு ஓர வயலில் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 29 பேர் படுகாயம்


தஞ்சை அருகே, ரோட்டு ஓர வயலில் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி; 29 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 April 2019 4:45 AM IST (Updated: 20 April 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ரோட்டு ஓர வயலில் பஸ் கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார். அவர் இறங்குவதற்காக படிக்கட்டிற்கு வந்தபோது உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது. 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் நேற்று மதியம் 3.15 மணி அளவில் தஞ்சையை அடுத்த வயலூர் அருகே சென்று கொண்டு இருந்தது. ஒரு வளைவில் பஸ் சென்றபோது எதிரே வந்த ஒரு கார், பஸ் மீது மோதுவது போல் வந்தது.

இதனையடுத்து பஸ் டிரைவர் கார் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் விபத்து நடந்த இடத்துக்கு ஓடி வந்தனர்.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்களும், போலீசாரும் மீட்டனர்.

பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த தஞ்சையை அடுத்த மானாங்கோரை குடியான தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சண்முகசுந்தரம்(வயது 30), பஸ்சின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இவர், விபத்து நடந்த இடத்துக்கு அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக படிக்கட்டிற்கு வந்துள்ளார். பஸ் கவிழ்ந்தபோது பஸ்சில் இருந்து வெளியே விழுந்தவர் மீது பஸ் விழுந்து நசுக்கியது.

மேலும் படுகாயம் அடைந்த 29 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருச்சியை அடுத்த மணப்பாறை வரதராஜ்(28), கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி ஜோசப்(43), பின்னையூர் தமிழ்ச்செல்வி(85), கொரநாட்டு கருப்பூர் நூர்முகமது(50), நகரம்பேட்டை ராதாகிருஷ்ணன்(60), திருவிடைமருதூர் சோமசுந்தரம் (75), ராஜலட்சுமி(67), பந்தநல்லூர் குந்தளாம்பிகை(62), தட்டுவாஞ்சேரி நர்கீஸ்பானு(29), பாபநாசம் ஜான்சி(10), வசந்தகுமார்(21), நாயக்கர்பேட்டை வருண்குமார்(19), புதுமாத்தூர் அன்பழகன்(40), ராஜகிரி நிர்மலா(45), பண்டாரவாடையை சேர்ந்த கமலாமேரி(35), அய்யம்பேட்டை ஜாஸ்மின்(5), சுவாமிமலை ஆனந்தி(21), சுந்தரபெருமாள் கோவில் கலாவதி(45), கடலூரை அடுத்த வீராந்தபுரம் தேவகி(58), சேத்தியாத்தோப்பு வனிதா(36), திருவாரூரை அடுத்த தலத்தன்குடி தமிழ்ச்செல்வி(50), குடவாசல் பெருமாள்(30), திருத்துறைப்பூண்டி செந்தமிழ்ச்செல்வி(34), நாகை மாவட்டம் பூம்புகார் விஜய்(25), திருப்பூர் மாவட்டம் பல்லடம் சந்திரமோகன்(45), திருச்சி சமயபுரம் அனுசியா(30), தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை வேல்ராஜ்(59), தஞ்சை கரம்பை அரவிந்த்(22), நாகை மாவட்டம் வேதாரண்யம் நந்தினி(19).

இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story