மோகனூர், பரமத்தி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
மோகனூர், பரமத்தி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பகலில் வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்த்தனர். இதனால் பகல் நேரங்களில் சாலை வெறிச்சோடியே காணப்பட்டது.
இந்த நிலையில் மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவில் லேசான காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல காற்றின் வேகம் அதிகரித்தது. பின்னர் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குட்டை போல தேங்கி நின்றது. மேலும் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு மோகனூர் அருகே எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து விழுந்தன.
மேலும் பல்வேறு இடங்களில் மரங்களும் முறிந்து சாலையில் விழுந்தன. மோகனூர் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்ததால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story