அவதூறுகளை பரப்பி வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் அய்யாக்கண்ணு பேட்டி


அவதூறுகளை பரப்பி வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 21 April 2019 4:30 AM IST (Updated: 20 April 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

அவதூறுகளை பரப்பி வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என திருச்சியில் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று பிற்பகல் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், துணைத்தலைவர்கள் நெல்லை செந்தில்குமாரசாமி, புதுகை முருகேசன், செங்கோட்டை ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயலாளர்கள் கபிஸ்தலம் முருகன், திருவண்ணாமலை தினேஷ், விருத்தாசலம் சக்திவேல் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை பட்டீஸ்வரன், அரியலூர் ஆண்டவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சமீபகாலமாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு குறித்து சமூக வலைதளங்களான டுவிட்டர், முகநூல், வாட்ஸ்அப் ஆகியவற்றில் அவதூறுகள் பரப்பி வருபவர்கள் யார் என கண்டறிய சைபர் கிரைம் போலீசில் புகார் செய்வது என்றும், அடுத்தக்கட்டமாக அவதூறுகள் பரப்பிவரும் சில விவசாய சங்க நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எனவும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 23-ந் தேதி சென்னை சென்று டி.ஜி.பி. மற்றும் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை பற்றி அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசிவருபவர்கள் பற்றியும், முக்கியமாக பி.ஆர்.பாண்டியன், கார்மாங்குடி வெங்கடேசன், நல்லசாமி இவர்களெல்லாம் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். அவர்கள் மீது மானநஷ்ட வழக்கும், கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவது என்றும் ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள். எங்களுக்கு கட்சி என்று எதுவுமே கிடையாது. எங்களுடைய கோரிக்கைகளான நதிநீர் இணைப்பு, விளை பொருட்களுக்கு லாபகரமான விலை, அதுவரை வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி, 60 வயது பூர்த்தியான அனைத்து விவசாயிகளுக்கும், மகன்-மகள் இருந்தாலும், பட்டா நிலம் இருந்தாலும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வேண்டும். வெளிநாட்டில் இருந்து மரபணு மாற்றப்பட்ட விதைகளையும், உணவையும் இறக்குமதி செய்யக்கூடாது. சின்ன, பெரிய விவசாயிகள் என்ற பாரபட்சம் பார்க்கக்கூடாது. எங்களது 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக பாரதீய ஜனதாவும், ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக காங்கிரசும் தெரிவித்தது.

அதனால், தேர்தலில் நாங்கள் யாருக்குமே ஆதரவு கொடுக்கவில்லை. நடுநிலையுடன் இருக்கிறோம். ஆனால், நாங்கள் காங்கிரஸ், தி.மு.க. சொல்லிதான் டெல்லிக்கு போராட்டம் நடத்த போனதாகவும், தற்போது பாரதீய ஜனதாவுக்கு ஆதரவான நிலை எடுத்திருப்பதாகவும் தவறான செய்திகளை வேண்டும் என்றே கெட்ட நோக்கத்தில், நாக்கில் எலும்பு இல்லை என்பதற்காக எப்படிவேண்டுமானாலும் பேசலாம் என்பவர்கள் மீது சைபர் கிரைமில் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story