ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு திருவள்ளூர் கலெக்டர் தகவல்


ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு திருவள்ளூர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 April 2019 10:15 PM GMT (Updated: 20 April 2019 7:14 PM GMT)

ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது என்று திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள ஸ்ரீராம்வித்யா மந்திர் பள்ளி மற்றும் ஸ்ரீராம் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நாடாளுமன்ற தேர்தல் பொதுப்பார்வையாளர் டாக்டர் சுரேந்திரகுமார், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஷோபா ஆகியோர் எந்திரங்களை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-
வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்து வேப்பம்பட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த வளாகத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் வருவதற்கு ஏதுவாக இந்த வளாகத்தில் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

Next Story