மணப்பாறை பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்


மணப்பாறை பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 20 April 2019 11:00 PM GMT (Updated: 20 April 2019 7:54 PM GMT)

கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மணப்பாறை பஸ்நிலையத்தில் மாணவ, மாணவிகள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

திருச்சியை அடுத்த வண்ணாங்கோவில் பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்ட கல்லூரிகள் உள்ளன. இங்கு மணப்பாறை மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் அனைவரும் பஸ் பாஸ் வைத்து அரசு பஸ்சில் சென்று வருகிறார்கள்.

ஆனால் மணப்பாறை பஸ்நிலையத்தில் இருந்து முறையாக பஸ்கள் இயக்கப்படாததால், ஒரே பஸ்சில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் உயிரை பிணையம் வைத்து, பஸ் படிக்கட்டில் தொங்கிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல பஸ்களில் மாணவ-மாணவிகளை ஏற்ற மறுப்பதாக கூறி கல்லூரி மாணவ-மாணவிகள் பல முறை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

அப்போது, அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து, அனுப்பிவிடுவார்கள். பின்னர் மீண்டும் பஸ்சுக்காக காத்திருந்து போராடும் நிலை இருந்து வருகின்றது. இதனால், குறித்த நேரத்துக்கு கல்லூரிக்கு செல்லமுடியாமல் மாணவ-மாணவிகள் பலர் கல்லூரிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்றுகாலை கல்லூரிக்கு செல்ல மாணவ-மாணவிகள் பஸ்நிலையத்தின் உள்ளே திரண்டு நின்றிருந்தனர். ஆனால் கல்லூரிக்கு செல்ல முறையாக பஸ் இல்லை. இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்ல பஸ்வசதி கேட்டு பஸ்நிலையத்தில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பஸ்நிலையத்தில் இருந்து மற்ற பஸ்கள் வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உடனடியாக ஒரு பஸ் அங்கு கொண்டுவரப்பட்டது.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள், போராட்டம் நடத்தினால் மட்டும் உடனே பஸ்சை கொண்டு வருகிறீர்கள். அதை முன்பே அனுப்பியிருந்தால் நாங்கள் கல்லூரிக்கு குறித்த நேரத்துக்கு சென்றிருப்போமே என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மாணவ-மாணவிகளை சமரசம் செய்து, அவர்களை பஸ்சில் ஏற்றினார்கள். இதைதொடர்ந்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 

Next Story