வருசநாடு வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது


வருசநாடு வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2019 4:00 AM IST (Updated: 21 April 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடமலைக்குண்டு,

வருசநாடு வனச்சரகத்துக்கு உட்பட்ட மஞ்சனூத்து வனப்பகுதியில், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் இக்பால் தலைமையில் வனவர்கள் பூவேந்திரன், பிரதீப் மற்றும் வனத்துறையினர் மஞ்சனூத்து வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசரடி மலைப்பாதையில் சந்தேகப்படும்படியாக 3 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை வழிமறித்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற 3 பேரை மடக்கி பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது 40), திவாகரன் (34), சுரேஷ் (36) என்றும், தப்பியோடியவர் அதே பகுதியை சேர்ந்த அம்சமணி என்றும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து வனத்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் ஒரு கைத்துப்பாக்கி, 2 நாட்டு துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும், டார்ச் லைட்டும் இருந்தன. இதில் ஒரு நாட்டு துப்பாக்கி முழுமையாகவும், மற்றொரு துப்பாக்கியின் பாகங்கள் தனித்தனியாகவும் இருந்தது. இவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்கள் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அம்சமணியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story