குமரி மாவட்டத்தில் மழை: அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது திற்பரப்பில் 68 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை: அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது திற்பரப்பில் 68 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 21 April 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பெய்த மழையில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 68 மி.மீ. பதிவானது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு பலத்த காற்று வீசியது. மேலும் இடியும், மின்னலுமாக இருந்தது. பின்னர் அதிகாலையில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் வரை நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்தது.

பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் செயல்பட்டு வந்த பழைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால் பள்ளிக்கூடத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த புதிய கட்டிடத்தில் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது. அதன் மேற்கூரைகளும் சரிந்து விழுந்தது. நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 68 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:–

பேச்சிப்பாறை–43.2, பெருஞ்சாணி–9.4, சிற்றார் 1– 52.4, நாகர்கோவில்–23, பூதப்பாண்டி–19.6, சுருளோடு–7.2, ஆரல்வாய்மொழி–1.4, பாலமோர்–5.2, மயிலாடி–24.2, கொட்டாரம்–8.4, ஆனைக்கிடங்கு–29, குருந்தன்கோடு–24, அடையாமடை–16, கோழிப்போர்விளை–53, முள்ளங்கினாவிளை–5, புத்தன் அணை–10, சிற்றார் 2–62 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

Next Story