போலீஸ் அதிகாரி மீதான நடவடிக்கையை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்


போலீஸ் அதிகாரி மீதான நடவடிக்கையை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 5:38 PM GMT)

போலீஸ் அதிகாரி மீதான நடவடிக்கையை கண்டித்து நீடாமங்கலத்தில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடி அருகே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை நீடாமங்கலம் பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நீடாமங்கலம் பெரியார் சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து பெரியார் அரங்கத்தை அடைந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீதான நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கூறினர். ஆனால் இளைஞர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகரை மீண்டும் நீடாமங்கலத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து

பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். இந்த மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு எழுதி கொடுத்து விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story