மஞ்சூர் அருகே, சாலையில் உலா வந்த காட்டுயானை - வாகன ஓட்டிகள் பீதி
மஞ்சூர் அருகே சாலையில் உலா வந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை பகுதி. இங்கு கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இவை தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. மேலும் மஞ்சூர்-கெத்தை சாலையில் அவ்வப்போது உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த காட்டுயானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கெத்தை, எல்.ஜி.பி. பிரிவு, மந்து ஆகிய பகுதிகளில் தனியாக சுற்றித்திரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மஞ்சூர்-கெத்தை சாலையில் பெகும்பள்ளம் அருகில் அந்த காட்டுயானை உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைந்து, தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். சில வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியதால், திடீரென ஆவேசமடைந்த காட்டுயானை அந்த வாகனங்களை நோக்கி ஓடி வந்து பயமுறுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து சாலையில் இருந்து விலகி அருகிலுள்ள வனப்பகுதிக்குள் அந்த காட்டுயானை சென்றது. இதனால் அந்த வழியில் தடைபட்டு இருந்த போக்குவரத்து, மீண்டும் தொடங்கியது. காட்டுயானைகள் மஞ்சூர்-கெத்தை சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்ளிட்ட பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை பொதுமக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 2 காட்டுயானைகள் கோட்டப்பாடி பகுதியில் புகுந்து வாழைகளை தின்று சேதப்படுத்தின.
நேற்று காலை 6 மணிக்கு அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலைக்கு காட்டுயானைகள் வந்தன. தொடர்ந்து வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலையில் நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு காட்டுயானை கோட்டப்பாடியில் இருந்து மழவன்சேரம்பாடி குறிஞ்சி நகர் வழியாக கொளப்பள்ளி செல்லும் தார்ச்சாலையில் நடந்து சென்றது. மற்றொரு காட்டுயானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story