ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 April 2019 4:15 AM IST (Updated: 22 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தளி, 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடுமலை அருகே உள்ள ஆண்டியூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 22). கூலிவேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது உடைய பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் மாணவியை காணவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். மேலும் மாணவியை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாணவி கேரளாவில் வெங்கடேசுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கேரளா சென்று மாணவியை மீட்டு உடுமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் வெங்கடேசையும் உடன் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் 5-ந் தேதி மாணவியை ஆசை வார்த்தை கூறி உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு வெங்கடேஷ் கடத்தி சென்றதும், அங்கு அவரை திருமணம் செய்து கொண்டதும், அதன்பின்னர் மாணவியை கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வெங்கடேசை கைது செய்த போலீசார் அவரை, உடுமலை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (கூடுதல் பொறுப்பு) கிருஷ்ணவேணி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து கோவை சிறையில் வெங்கடேஷ் அடைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக மாணவி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story