குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை


குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை
x
தினத்தந்தி 21 April 2019 10:15 PM GMT (Updated: 21 April 2019 7:32 PM GMT)

குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பட்டுக்கோட்டை வாலிபரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் விசாரணை நடத்தினார்.

தஞ்சாவூர்,

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய ஆடியோ வாட்ஸ்-அப் மூலம் பரவியதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்காங்கே முத்தரையர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ராசியங்காடு கிராமத்தை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர், தனது வாட்ஸ்-அப்பிற்கு வந்த ஆடியோ பதிவை தான் அனுப்பி வைத்தேன். நான் ஆடியோ பதிவு செய்யவில்லை என போலீசாரிடம் மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து பல மணிநேரம் விசாரணை நடத்தியும் அவர் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில், வாட்ஸ்-அப் தகவலுடன் தன்னை இணைத்து முகநூலில் தவறான தகவல்களை பரப்புவதாக கூறி அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் கீரனூர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

ஆடியோ பதிவை முதன்முதலில் வாட்ஸ்-அப்பில் யார் பதிவு செய்தார் என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ்-அப் நிறுவனத்தின் உதவியை புதுக்கோட்டை போலீசார் நாடியுள்ளனர்.

Next Story