கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 22 April 2019 4:00 AM IST (Updated: 22 April 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி, கலியுக வரதராஜ பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, மற்றும் கலியுக வரதராஜ பெருமாளை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்து பூஜைகள் செய்யப்பட்டபின் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் அதன் நிலையை அடைந்தது.

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவுபடி அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று (திங்கட்கிழமை) இரவு ஏகாந்த சேவை நடைபெறுகிறது.

Next Story