திருச்சிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்


திருச்சிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்
x
தினத்தந்தி 22 April 2019 4:15 AM IST (Updated: 22 April 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் திருச்சியில் இருந்து ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து 2-ம் கட்ட தேர்தல் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கடந்த 18-ந் தேதி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவப்படையினர் 700-க்கும் மேற்பட்டோர் ரெயில் மூலம் திருச்சிக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பிரித்து அனுப்பப்பட்டனர்.

அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் சில நாட்கள் தங்கி இருந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபடுவது, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணி போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 700-க்கும் மேற்பட்டோர் 5 வாகனங்களில் நேற்று பகல் திருச்சிக்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர். முன்னதாக திருச்சி ரெயில் நிலையத்துக்கு வந்த துணை ராணுவப்படையினர் ரெயிலில் புறப்படுவதற்கு முன்பாக தங்களுடைய துப்பாக்கிகள் மற்றும் உடைமைகளை ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அடுக்கி வைத்து இருந்தனர். இதனை பயணிகள் பலர் பார்வையிட்டபடி சென்றனர். 

Next Story