மராட்டியத்தில் 3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் 14 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு


மராட்டியத்தில் 3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் 14 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் நேற்று பிரசாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் 3-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் நேற்று பிரசாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

3-ம் கட்ட தேர்தல்

மராட்டியத்தில் 4 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் 2 கட்ட தேர்தல் முறையே 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

3-வது கட்டமாக ஜல்காவ், ராவேர், ஜல்னா, அவுரங்காபாத், ராய்காட், புனே, பாராமதி, அகமதுநகர், மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனங்கலே ஆகிய 14 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தீவிர பிரசாரம்

தேர்தலையொட்டி பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சாவன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. முன்னதாக பிரசாரத்துக்கு கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

முக்கிய தலைவர்கள்

இதேபோல் தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவை சுமுகமாக நடத்துவதற்கான ஆயத்த வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் வேகவேகமாக தயார் படுத்தப்படுகின்றன.

இந்த தொகுதிகளில் மொத்தம் 249 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஜல்னாவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, புனேயில் போட்டியிடும் பா.ஜனதா மாநில மந்திரி கிரிஷ் பாபத், பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, அகமது நகர் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல்(பா.ஜனதா), ஹட்கனங்கலே தொகுதியில் போட்டியிடும் சுவாபிமானி பக்சா கட்சியின் தலைவர் ராஜூ ஷெட்டி ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவர்.

Next Story