நவீனமாகும் கல்வித்துறை, 320 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி
கல்வித்துறை நவீனமயமாவதையொட்டி 320 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது.
திண்டுக்கல்,
அரசுத்துறை அலுவலகங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருவதைப்போல் தற்போது பள்ளி கல்வித்துறையும் நவீனமயம் ஆக்கப்பட்டு வருகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஆணைகள் இனிவருங்காலங்களில் இணையதளம் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் இணைய தளத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக் கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங் கப்படும் அனைத்து ஆணைகளும் இணையதளம் வழியாக அனுப்பப்படும். இதனால் அரசு ஆணைக் காக காகிதத்தை பயன்படுத்துவது பெருமளவு குறைந்துவிடும். இந்த நிலையில் தற்போது அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 320 தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கல்வித்துறை நவீனமயமாவதை தொடர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டு விடும்.
முன்னதாக தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். கல்வித்துறை சார்ந்த ஆவணங்களை அதில் எப்படி பதிவேற்றம் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆவணம் தயாரிப்புக்காக காகிதங்களை பயன்படுத்துவது குறைந்துவிடும். மேலும் ஆவணங்கள் சேதமடைந்துவிடுமோ? என்ற கவலையும் இருக்காது என்றனர்.
Related Tags :
Next Story