தலைமை பயிற்சி தேவையா?


தலைமை பயிற்சி தேவையா?
x
தினத்தந்தி 22 April 2019 11:55 AM GMT (Updated: 22 April 2019 11:55 AM GMT)

தலைமை ஏற்போம் வாருங்கள்

தலைமையை அலங்கரிக்கும் தலைவர்களில் பலர் முறையான பயிற்சி பெற்று, பின்னர் தலைவர்களாக மாறியிருக்கிறார்கள்.

குறிப்பாக-தொழில்துறையில் தலைமை ஏற்க விரும்புபவர்கள் கண்டிப்பாக தொழில் சம்பந்தப்பட்ட பல பயிற்சிகள் மேற்கொண்ட பின்புதான் தலைமையை ஏற்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் உப்பு உற்பத்தியில் மிகச்சிறந்த புகழ்பெற்று விளங்கினார். ‘தனது மகனை தொழிலதிபராக்க வேண்டும்’ என்ற எண்ணம் அவருள் இழையோடியது. படிக்கும் காலத்திலேயே தனது மகனிடம் அந்த எண்ணத்தைத் தெளிவாகச் சொல்லி வைத்தார்.

கல்லூரியில் படித்த அவரது மகனின் கவனம் படிப்பிலும், புதிய தொழில் தொடங்கும் எண்ணத்திலும் சென்றது. வணிகம் சம்பந்தப்பட்ட படிப்பையே தேர்ந்தெடுத்துப் படித்த அவன், நாள்தோறும் தொழில் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தான்.

பேராசிரியர்களை நேரில் சந்தித்து தொழில் பற்றிய அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டான். கல்லூரியில் படிக்கும்போதே மாவட்டத்தொழில் மையம், தொழில் அமைப்புகள் போன்றவற்றை நேரில் பார்வையிட்டு, தகுந்த வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொண்டான்.

கல்லூரிப்படிப்பு முடிந்ததும், புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டான். ‘துணிக்கடை ஒன்றை பெரிய அளவில் ஆரம்பிக்கலாம்’ என முடிவுசெய்து தனது குடும்பத்தார் உதவியுடன் அதற்கான பணிகளைத் தொடங்கினான்.

சென்னை, கோவை போன்ற இடங்களுக்குச்சென்று சில துணிக்கடைகளில் வேலை பார்த்தான். முதலில், காபி வாங்கிக் கொடுக்கும் ஊழியருக்கான பணி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர் துணியை பார்சல் செய்யும் பணி, அதனைத் தொடர்ந்து துணிகளை மடித்துக்கொடுக்கும் பணி, பின்னர், துணியை விரித்துக்காட்டும் பணி, வாடிக்கையாளரை வரவேற்கும் பணி, கணக்கு எழுதும் பணி, பணம் பெற்றுக்கொள்ளும் கேஷியர் பணி - இப்படி பல்வேறு பணிகளில் ஈடுபட்டதால், துணிக் கடையில் நல்ல அனுபவம் கிடைத்தது.

ஓராண்டுக்குள் அந்தத் துணிக் கடைகளில் பெற்ற தனது அனுபவங்களை வைத்து நல்ல நட்புகளை உருவாக்கிக்கொண்டான். குஜராத், சூரத், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களுக்குச் சென்று துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்வதற்குச்செல்லும் நபருக்கு துணையாகவும் மாறிக்கொண்டான். பல மொழிகளை புரிந்துகொண்டான். வியாபார நுணுக்கங்களை தெளிவாக அறிந்துகொண்டான்.

இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தபின் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் உதவியோடு புதிய துணிக்கடையைத் தொடங்கினான்.

இன்று அவர்கள் தொடங்கிய துணிக்கடை தமிழகத்தில் மிகப்பிரபலமான துணிக்கடையாக விளங்குகிறது. அந்தக்கடையின் முக்கிய தலைமைப் பொறுப்பில் தனது மகனை அமரச்செய்து அழகு பார்க்கிறார் அவனது தந்தை.

தொழில் துறையில் தலைமைப் பதவியைப்பெற்று தொழிலதிபராக விளங்க வேண்டும் என விரும்புபவர்கள், கண்டிப்பாக போதிய பயிற்சியினை பெற்றுக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வணிகத்திலுள்ள எல்லா நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி அவசியம் தேவை.

இப்போதெல்லாம் பல தனியார் வங்கிகளில் 30 வயதுக்குள் ‘வங்கி மேலாளர்’, ‘அதிகாரிகள்’ என்ற தலைமைப்பதவிகளை அலங்கரிப்பவர்களை பார்க்கலாம்.

தொழில்துறையில் நேரடியாக பல ஆண்டுகள் பயிற்சி பெற்றால்தான் தலைமைப் பதவியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இப்போது சற்று குறைய ஆரம்பித்திருக்கிறது.

தொழில்துறையில் நேரடிப்பயிற்சி பெறாதவர்களுக்கும், இளம் வயதிலேயே எல்லா துறைகளிலும் தலைமைப்பதவி வழங்க தொழில் வணிக நிறுவனங்கள் தயார்நிலையில் இருக்கின்றன.

ஏனென்றால், அவர்கள் படித்த பயிற்சியுடன்கூடிய பட்டம் அவர்கள் தலைமைப்பதவியை இளமையிலேயே பெற துணைநிற்கிறது.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடியாக தலைமைப் பதவியை வகிக்க விரும்பும் பலர், இப்போது எம்.பி.ஏ., (Master of Business Administration) பி.ஜி.டி.பி.எம்., (Post Graduate Diploma in Business Management) போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.

இந்தப் படிப்புகளை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள், ஒரு நிறுவனத்தை ஏற்று நடத்தும் தன்மையை, மாணவ நிலையில் இருக்கும்போதே ஒருவருக்கு கிடைக்கும் அளவுக்கு தலைமைப்பயிற்சியை வழங்குகிறது.

எம்.பி.ஏ., போன்ற வணிக மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகப் படிப்புகளில், தொழில் வணிக நிறுவனங்களை நிர்வாகம் செய்ய உதவும் ‘செய்முறைப்பயிற்சி’களும் வழங்கப்படுகிறது.

சுமார் 6 மாதங்கள் வரை தொழிற்சாலைகளுக்குச்சென்று, கல்லூரியில் படித்தபாடத்திலுள்ள முக்கிய கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘புராஜக்ட் டிரைனிங்’ வழங்கப்படுகிறது. மேலும், அங்கு பெற்ற அனுபவங்களை விரிவான விளக்க கட்டுரைகள் அடங்கிய ‘திட்ட அறிக்கைகளாக’ தயார் செய்யவும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்தத் ‘திட்ட அறிக்கை’யின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

மேலாண்மைப் படிப்புகளில் (Management Education), ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவி யிலிருந்து எப்படி நிர்வாகம் செய்வது? என்பதை மிகச்சிறப்பாக பயிற்சியுடன் வழங்குகிறார்கள்.

மேலும், இங்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகளான ‘விருந்தினர் பேருரை’ (Guest Lecture), ‘தொழிற்சாலை பார்வையிடல்’ (Industrial Visit), ‘கேஸ் அனாலிஸிஸ்’ (Case Analysis) போன்றவைகள் பல்வேறு துறைகளில் தலைமைப்பதவியைப் பெற ஒருவரை மெருகேற்றும் வகையில் அமைகின்றன.

‘முறையான பயிற்சிதான் முன்னேற்றத்தின் மூலதனம்’ என்பதை தொழில் மற்றும் வணிக நிறுவனத் தலைமையை விரும்புபவர்கள் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

சாதாரணமாக ஒரு வாகனம் ஓட்டுவதற்கே, தேவையான பயிற்சியை முறையாகப் பெற வேண்டியதை கட்டாயமாக மாற்றிஇருக்கிறார்கள். ஆனால், லட்சக் கணக்கில் பணம் முதலீடுசெய்து ஆரம்பிக்கும் தொழிலுக்கு தலைமைப்பதவி ஏற்க முறையான பயிற்சியைப் பெறாமல் தொழில் துறையில் கால் பதிக்கலாமா?

முறையான தலைமைப்பயிற்சி பெறாத தலைவர்கள், எந்தத்துறையில் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டாலும் அந்தத்துறை முடமாகிப்போவதை யாராலும் தடுக்க முடியாது.

நெல்லை கவிநேசன்


Next Story