ஒடுகத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் 5 பேர் கும்பலிடம் போலீசார் விசாரணை
ஒடுகத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று 5 பேர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு,
ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளுடைய தந்தைக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தந்தையை அவமானப்படுத்தும் நோக்கில் ஆண்டியின் மகன் குமார் (வயது 32) வீடு புகுந்து பலவந்தமாக மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
மாணவியின் தந்தை கண்விழித்தபோது தூங்கிக் கொண்டிருந்த தன் மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஆண்டியின் உறவினர் ரவி என்பவரின் வீட்டில் மாணவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மாணவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் துரைசாமி, சுரேஷ் ஆகிய 3 பேர் ரவியின் வீட்டிற்கு சென்று மாணவியை மீட்க முயன்றனர். அங்கு வந்த குமார், தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் 3 பேரில் ஒருவர் குமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மாணவியை மீட்டு 3 பேரும் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது தாயாரிடம் மாணவி, “என்னை ஆண்டி, சேட்டு, அண்ணாமலை, வேலு, ரவி ஆகிய 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்” என கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சென்று மாணவியை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் கூறியதாவது:-
கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியதில் ஒரு முறை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், மற்றொரு முறை அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்றும் கூறுவதால் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே கடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குமாரை கத்தியால் குத்தியதாக மாணவியின் தந்தை உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டி, சேட்டு, அண்ணாமலை, வேலு, ரவி ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story