ஆண்டிப்பட்டி அருகே முத்தனம்பட்டியில் 6 மாதமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு - மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார்


ஆண்டிப்பட்டி அருகே முத்தனம்பட்டியில் 6 மாதமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு - மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார்
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 5:03 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே முத்தனம்பட்டியில் 6 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தனம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எங்கள் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு குன்னூரில் வைகை ஆற்றில் உறைகிணறு அமைத்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் இருந்து தனியார் சிலர் தண்ணீரை திருடி விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் கடந்த 6 மாதமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், முத்தனம்பட்டி கிராமத்துக்கு அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

Next Story