நண்பரின் பிறந்தநாளை கொண்டாட வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி சாவு கோபி அருகே பரிதாபம்
கோபி அருகே நண்பரின் பிறந்தநாளை கொண்டாட வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
டி.என்.பாளையம்,
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் யூசுப் (வயது 49). பனியன் கம்பெனி தொழிலாளி. அவருடைய மகன் முகம்மது இப்ராஹிம் (18). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மனோஜ் பிரபு. இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார்.
பிரபுவின் பிறந்தநாளை நேற்று முன்தினம் அவருடைய வீட்டில் கொண்டாடினார்கள். இதில் முகம்மது இப்ராஹிமும் கலந்து கொண்டார். பின்னர் 2 பேரும் கோபி அருகே உள்ள வரப்பள்ளம் பவானி ஆற்றுக்கு சென்றனர். அங்கு இருவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். இதில் முகம்மது இப்ராஹிம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு நீச்சலும் தெரியாது.
இந்த நிலையில் பிரபு குளித்துவிட்டு வெளியே வந்தார். ஆனால் முகம்மது இப்ராஹிமை காணவில்லை. இதனால் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் உதவியுடன் அவரை பிரபு தேடிப்பார்த்தார். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு முகமது இப்ராஹிம் பிணமாக மீட்கப்பட்டார். உடனே இதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முகமது இப்ராஹிமின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பரின் பிறந்தநாளை கொண்டாட வந்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.