பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த கோட்டாட்சியர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை


பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த கோட்டாட்சியர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 April 2019 4:30 AM IST (Updated: 23 April 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கலவரத்தால் பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் கோட்டாட்சியரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அன்னவாசல்,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ வாட்ஸ்-அப்பில் பரவியது. இதையடுத்து அந்த ஆடியோவை வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 18-ந் தேதி இரவு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 19-ந் தேதி காலையில் மீண்டும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டக்காரர்கள் மீது லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம், போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால் கடந்த 19-ந் தேதி முதல் 21-ந்தேதி இரவு வரை பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டார். இதன்மூலம் அப்பகுதியில் அமைதி ஏற்பட்டதோடு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதால் 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இலுப்பூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சிவதாசை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த போது தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று அறிவித்திருக்க வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்த போது அதற்கு அவர் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும், இதனாலேயே அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து விழுப்புரம் என்ரிகா வடிப்பகத்தில் (டிஸ்ட்லரீஸ்) கோட்டாட்சியராக பணியாற்றி வந்த கீதா இலுப்பூர் கோட்டாட்சியராக பொறுப்பேற்க உள்ளார். 

Next Story