நாமக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை


நாமக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை
x
தினத்தந்தி 23 April 2019 3:45 AM IST (Updated: 23 April 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்துள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. இதற்கிடையே நேற்று பிற்பகல் 3 மணியளவில் நாமக்கல்லில் வானத்தில் கருமேகம் கூடியது. மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதேபோல் முதலைப்பட்டி, நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. ஆனால் இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.

ராசிபுரம் பகுதியில் நேற்று கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் மாலை 3 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாக்கடை நீரும் கலந்து சென்றது. ஒரு வழிப்பாதையில் உள்ள பொது சுகாதார வளாகத்தின் அருகில் உள்ள ஒருவரது வீட்டில் மழைநீருடன் சாக்கடை நீரும் புகுந்தது.

இதுபற்றி அந்த வீட்டின் உரிமையாளர் கூறும்போது, ‘சாக்கடை தூர்வாரப்படாமல் இருப்பதால் சாக்கடை நீர் மழை பெய்யும் சமயங்களில் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்படுகிறோம். உடனடியாக சாக்கடை தூர்வாரப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதேபோல வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில் மழை பெய்ய தொடங்கி 9 மணி வரை நீடித்தது. நாமகிரிப்பேட்டையிலும் நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

இதனால் மின்தடையும் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட மின்தடை இரவு 7 மணி வரை இருந்தது. பின்னர் அவ்வப்போது மின்சாரம் வந்து வந்து சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

Next Story