ராமேசுவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு


ராமேசுவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 22 April 2019 8:04 PM GMT)

ராமேசுவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் இலங்கையா(வயது 50). இவரது மனைவி செல்வி(44). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே மீனவர்கள். இவர்கள் தனுஷ்கோடி அருகே தற்காலிகமாக குடிசை அமைத்து மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நேற்று மதியம் 3 மணிக்கு வந்த இவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள், உடைகள் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகளும் திருடு போயிருந்தது.

உடனே இது குறித்து தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ், இன்ஸ்பெக்டர் திலகராணி, சப் –இன்ஸ்பெக்டர்கள் ராஜராஜேஸ்வரி, நல்லுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

வீட்டின் இடது பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு தொடர் விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கச்சிமடத்தில் 5–க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதற்கு மறுநாளும் மெய்யம்புளி தேவசபை அருகே உள்ள ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சத்தினை போக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story