கோவையில் கடைகள், ஓட்டல்களில் திடீர் சோதனை - 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


கோவையில் கடைகள், ஓட்டல்களில் திடீர் சோதனை - 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 8:38 PM GMT)

கோவையில் கடைகள், ஓட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்டிக்கிற்கு பதில் துணி பைகள் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. தொடக்கத்தில் இந்த உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படவில் லை. பொதுமக்களும் துணி பைகளை கொண்டு சென்று பொருட்களை வாங்கினார் கள். ஓட்டல்களுக்கு பார்சல் வாங்க சென்றவர்களும் பாத்திரங்கள் கொண்டு சென்றனர். தமிழக அரசின் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. பிளாஸ்டிக் மீதான தடை காரணமாக வாழை இலை, பாக்கு மட்டை போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்தது.

இந்த நிலையில் கோவையில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஸ்வரண் குமார் ஜடாவத், உதவி ஆணையாளர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் கடைகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி நகர்நல அதிகாரி சந்தோஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோவை- சத்தி சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் நேற்றுக்காலை அதிரடி சோதனை நடத்தினார் கள். அப்போது 50-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைக்காரர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி நகர் நல அதிகாரி சந்தோஷ்குமார் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும். எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருப்பவர்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுப் பொருளை பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story