மாவட்டத்தில் கடந்த 3½ மாதங்களில் 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மாவட்டத்தில் கடந்த 3½ மாதங்களில் 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, புதுப்பட சி.டி. விற்பனை, கஞ்சா-மது விற்பனை, பாலியல் பலாத்காரம், கடத்தல் சம்பவங்கள் என சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகிறார்கள்.
வெளியே வந்த பின்னர் அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? எனவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்களா? எனவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் தொடர்பில் உள்ளார்களா? எனவும் போலீசார் கண்காணிக்கிறார்கள்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்கள் மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து அவர்களை ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வரமுடியாத வகையில், குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், துணை கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்கிறார்கள். இவ்வாறு கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை மாநகரத்தில் 12 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்கிறார்கள். இவ்வாறு 17 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட 29 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story