சிறுபாக்கம் அருகே, குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


சிறுபாக்கம் அருகே, குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 April 2019 3:19 AM IST (Updated: 23 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபாக்கம், 

சிறுபாக்கம் அருகே உள்ள மங்களூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 15 மினி குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 15 மினி குடிநீர்தொட்டிகளில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தன.இதனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும், விளைநிலங்களுக்கும் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். பழுதடைந்த மின்மோட்டார்களை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் மங்களூரில் சிறுபாக்கம்-திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழுதடைந்த மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், இளங்கோவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story