முன்டக்குன்னு வனப்பகுதியில் குட்டியானை சாவு - வனத்துறையினர் விசாரணை


முன்டக்குன்னு வனப்பகுதியில் குட்டியானை சாவு - வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 23 April 2019 4:30 AM IST (Updated: 23 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

முன்டக்குன்னு வனப்பகுதியில் குட்டியானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் வறட்சி நிலவுவதால், வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் அருகே முன்டக்குன்னு வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுயானைகள் கூட்டமாக முகாமிட்டு இருந்தன. இதனால் அப்பகுதி ஆதிவாசி மக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு ஆதிவாசி மக்கள் தகவல் கொடுத்தனர். போதிய வெளிச்சம் இல்லாததாலும், காட்டுயானைகள் கூட்டமாக இருந்ததாலும் வனத்துறையினரால் சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு தேவாலா வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்றனர்.

அப்போது காட்டுயானைகள் கூட்டமாக அப்பகுதியில் நின்றிருந்தது. மேலும் அதன் நடுவில் குட்டியானை ஒன்று இறந்து கிடந்தது. பின்னர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் காட்டுயானைகள் அங்கிருந்து செல்லவில்லை. மேலும் அவை வனத்துறையினரை துரத்த முயன்றன. இதனால் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்டினர்.

பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு காட்டுயானைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன. பின்னர் குட்டியானையின் உடல் கிடந்த இடத்தின் அருகே வனத்துறையினர் சென்று பார்வையிட்டனர். அப்போது அதன் உடலில் படுகாயங்கள் இருந்தன. மேலும் குட்டியானை இறந்து 2 நாட்கள் ஆனது தெரிய வந்தது.

இதையொட்டி கால்நடை டாக்டர் டேவிட்மோகன் வரவழைக்கப்பட்டு, குட்டியானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அப்பகுதியில் புதைக்கப்பட்டது. இது குறித்து வனச்சரகர் சரவணன் கூறியதாவது:-

காட்டுயானைகள் கூட்டமாக குட்டியை அழைத்து கொண்டு வந்துள்ளது. பிறந்து 4 மாதங்களே ஆன ஆண் குட்டியை பெரிய காட்டுயானை தாக்கி உள்ளது. இதில் குட்டி யானையின் வயிற்றில் படுகாயங்கள் ஏற்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story