ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால் பரபரப்பு
ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணிநேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாக்கடையில் உள்ள கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாக்கடையில் ஓடியது. இதனால் தண்ணீர் வடிந்த பிறகு பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. மாநகரின் தாழ்வான பகுதியாக இருப்பதால் ஈரோடு நேதாஜி மார்க்கெட், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த மழைநீர் ஓடை வழியாக மோசிக்கீரனார் வீதிக்கு சென்றது. அங்கு சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. மழை நீண்ட நேரம் பெய்ததால் தண்ணீரின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க வீடுகளுக்குள் கழிவுநீர் கலந்த மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள கழிவுநீரை பாத்திரங்களில் பிடித்து மக்கள் வெளியேற்றினர்.
நேற்று காலையில் அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்ததும் சாலையில் கழிவுநீர் பரவி காணப்பட்டது. அங்கு பொதுமக்கள் நடக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் அங்கு வந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகளும் அங்கு சென்று சுத்தம் செய்யும் பணியை துரிதப்படுத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
ஈரோடு பஸ் நிலையம், பிரப்ரோடு, தில்லை நகர், கோட்டை, மணிக்கூண்டு, நேதாஜி காய்கறி மார்க்கெட், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீரும் மோசிக்கீரனார் 5–வது வீதிக்கு தான் வருகிறது. எங்கள் பகுதிக்கு அருகில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலுக்கு தரைப்பாலமாக கழிவுநீர் செல்லும் வகையில் ஓடை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக வெளியேறும் கழிவுநீர் காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது. ஆனால் தரைப்பால ஓடையில் குப்பை குவிந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்தபோது தண்ணீர் செல்ல முடியாமல் வீதியில் தேங்கி நின்றது. மேலும், காலிங்கராயன் வாய்க்காலின் கரையிலும் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதன் வழியே தண்ணீர் வெளியேறி தரைப்பாலத்தில் கலக்கிறது. குறிப்பாக தரைப்பாலம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளதால் எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. எல்லோரும் மழை பெய்யுமா? என்று காத்திருக்கும் சமயத்தில் எங்களுக்கு சிறிது நேரம் மழை பெய்தாலே அன்றைய தினம் பெரும் சவாலாக மாறிவிடுகிறது.
வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பெரும் சிரமப்பட்டோம். மழைநீரை கூட சுத்தம் செய்துவிடலாம், கழிவுநீர் புகுந்தால் எங்களால் என்ன செய்ய முடியும்?
இதுதொடர்பாக நாங்கள் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட கலெக்டரிடமும் பலமுறை மனு கொடுத்து இருக்கிறோம். மார்க்கெட் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் மழைநீரால் அடித்து செல்லப்பட்டு மோசிக்கீரனார் வீதிக்கு வந்துவிடுகிறது. இதனால் எங்கள் பகுதியே குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. எங்களுக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு மாநகராட்சி நகர்நல அதிகாரி சுமதி கூறும்போது, ‘‘நாங்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து இடத்தை பார்வையிட்டோம். மேலும், சாக்கடை தூர்வாரப்பட்டு வருகிறது. நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’’, என்று உறுதி அளித்தார். அதன்பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை முழுவதும் கழிவுநீராக இருந்ததாலும், சாக்கடையில் குப்பைகள் குவிந்து கிடந்ததாலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. சுமார் 3 மணிநேரமாக அங்குள்ள சாக்கடைகள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.