ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை மொடக்குறிச்சியில் 51 மி.மீட்டர் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 51 மி.மீட்டர் மழை பதிவானது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்துவதும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பனையம்பள்ளி, புங்கம்பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது.
இந்த மழை இரவு 10 மணி வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பவானிசாகர் வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதேபோல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எழுமாத்தூர், அவல்பூந்துறை, நஞ்சைஊத்துக்குளி, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் வெளுத்து வாங்கியது.
திடீரென மாலை 6 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இரவு 8.30 மணி அளவில் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து இரவு 10.30 மணி வரை நிற்காமல் மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மொடக்குறிச்சியில் மட்டும் 51 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை மிதமான மழை பெய்தது. அப்போது சூறாவளிக் காற்று வீசியதால் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசம் ஆனது. மேலும் செலம்பனூர் லோகநாதன் என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்து வாழைகளும் சாய்ந்தன. இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
தாளவாடியில் நேற்று மதியம் 2.30 மணி முதல் 2.45 மணி வரை சுமார் 15 நிமிடம் மழை பெய்தது. இதேபோல் நெய்தாளபுரம், சிக்கள்ளி, இக்களூர், கும்டாபுரம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
சிவகிரி பகுதியில் கடந்த 1 மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்தது. இதனால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக வேக வைத்து விவசாய நிலங்களில் காயப்போடப்பட்டு இருந்த மஞ்சள்கள் நனைந்தன.
இதேபோல் சத்தியமங்கலம், அறச்சலூர், சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி, கொடுமுடி, தாளவாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–
மொடக்குறிச்சி – 51
ஈரோடு – 22
பவானி – 22
சென்னிமலை – 11
பெருந்துறை – 10
கொடுமுடி – 7.6
கவுந்தப்பாடி – 7.2
அம்மாபேட்டை – 5.4
கோபிசெட்டிபாளையம் – 5
சத்தியமங்கலம் – 5
தாளவாடி – 3
பவானிசாகர் – 1.2