தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது ‘‘மயிரிழையில் உயிர் தப்பினோம்’’ இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி


தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது ‘‘மயிரிழையில் உயிர் தப்பினோம்’’ இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

தொடர் குண்டு வெடிப்பின்போது இலங்கையில் சிக்கி உயிர் தப்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் செல்வராஜ் நேற்று திருப்பூர் திரும்பினார். ‘‘மயிரிழையில் உயிர் தப்பினோம்’’ என்று அவர் கூறினார்.

திருப்பூர்,

இலங்கையில் தேவாலயம், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பில் 300–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த குண்டு வெடிப்பின்போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் சிக்கி, பின்னர் நேற்று திரும்பூர் திரும்பினார்கள்.

குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த செல்வராஜ் தனது திகில் அனுபவத்தை கூறியதாவது:–

இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்லலாம் என்று கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இதுவரை நான் வெளிநாடு சென்றதில்லை. இதனால் முதல்முறையாக இலங்கைக்கு செல்ல முடிவு செய்தோம்.

தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 20–ந் தேதி மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டோம். அன்று இரவு இலங்கைக்கு போய் சேர்ந்தோம். என்னுடன் கட்சியின் 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜ்மோகன்குமார், மாநகர பொருளாளர் செந்தூர் முத்து, 6–வது வார்டு செயலாளர் மணி, ஓட்டல் அதிபர் முருகானந்தம் ஆகியோரும் வந்தனர்.

கொழும்பு நகரில் கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டலில் தங்கினோம். நான் மற்றும் 2 பேர் ஓட்டலின் 7–வது மாடியிலும், மீதம் உள்ள 3 பேர் 6–வது மாடியிலும் அறையில் தங்கியிருந்தோம். 21–ந் தேதி காலை எழுந்து குளித்து முடித்து விட்டு டிபனுக்காக ஓட்டலின் கீழ் தளத்துக்கு செல்ல தயாராக இருந்தோம்.

காலை 8.45 மணி அளவில் ஓட்டலின் கீழ்த்தளத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த ஓட்டல் கட்டிடமே குலுங்கியது. ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீர் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியது. முதலில் இதைப்பார்த்ததும் சுனாமி வந்து விட்டது என்று நினைத்து அச்சமடைந்து திகிலோடு அமர்ந்து இருந்தோம். கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலாபுறமும் ஓடினார்கள்.

அதன்பிறகு ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச்சென்றனர். எங்கும் மரண ஓலம், ரத்த கறை சிதறி கிடந்தது. முதலில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறினார்கள். அதன்பிறகே வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. சாப்பிடுவதற்காக கீழ்த்தளம் செல்ல இருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. மயிரிழையில் நாங்கள் உயிர் தப்பினோம். எங்கு செல்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. அடுத்த என்ன நடக்கும் என்ற பீதியில் 6 பேரும் உறைந்து போனோம்.

சம்பவம் பற்றி அறிந்ததும் கவிஞர் வைரமுத்து எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். மேலும் மலேசியா நாட்டின் தமிழிசை சங்க தலைவர் ராஜேந்திரனும் எங்களுடன் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். பதற்றம் இல்லாமல் இருக்குமாறு எங்களுக்கு தைரியமூட்டினார்கள்.

அதன்பிறகு எங்கள் 6 பேரையும் கிங்ஸ்பரி ஓட்டலில் இருந்து வேறொரு இடத்தில் தங்க வைத்தனர். பாஸ்போர்ட்டை மட்டும் நாங்கள் கையில் வைத்திருந்தோம். உடமைகள் அனைத்தும் கிங்ஸ்பரி ஓட்டல் அறையில் இருந்தன. பின்னர் உடமைகளை எடுத்துக்கொண்டு தாஜ் ஓட்டலுக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். வெளியில் என்ன நடக்கிறது என்று கூட அறிய முடியவில்லை. சம்பவம் பற்றி அறிந்து எனது குடும்பத்தினர், நண்பர்கள் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தோம்.

நேற்று முன்தினம் தாஜ் ஓட்டலில் தங்க வைத்தனர். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேரத்துக்கு சாப்பாடு எங்களுக்கு வந்து சேர்ந்தது. எனக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் என்னை அனுமதித்தனர். அங்குள்ள தமிழ் பேசும் செவிலியர்கள் கூறியதை கேட்டபின்னர் தான் தொடர் குண்டு வெடிப்பில் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

நாங்கள் 23–ந் தேதி(நேற்று) இந்தியா திரும்புவதற்கு ஏற்கனவே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். அதன்படி காலையில் இலங்கையில் இருந்து கிளம்பி மதியம் 2.45 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தோம். இலங்கை மந்திரி, போலீஸ் அதிகாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தோம். கோவை மண்ணை மிதித்த பின்னர் தான் எனக்கு உயிரே வந்தது. எனது வாழ்நாளில் மறக்க முடியாத திகில் அனுபவம் இதுவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story