தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்
தாரமங்கலத்தில், வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தாரமங்கலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம், சங்ககிரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 54). இவருக்கு கார்த்திக், சீனிவாசன் என்ற 2 மகன்களும், தமிழ்செல்வி (28) என்ற மகளும் இருந்தனர். இதில் தமிழ்செல்வி பி.டெக். படித்துள்ளார்.
கடந்த 15 மாதங்களுக்கு முன்பு என்ஜினீயர் தமிழ்செல்விக்கும், தாரமங்கலம் 6 அடி விநாயகர் கோவில் அருகில் வசிக்கும் காமராஜ்-ராணி ஆகியோரின் மகன் வெங்கடேஷ் (29) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது. வெங்கடேஷ் ஒரு தனியார் காண்டிராக்டரிடம் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் வெங்கடேஷ் தனது மனைவி தமிழ்செல்வியிடம், ‘சொந்தமாக தொழில் செய்யலாம், உங்கள் வீட்டில் ரூ.10 லட்சம் வாங்கி வா‘ என கூறியுள்ளார். அதற்கு தமிழ்செல்வி, அவ்வளவு பணம் எனது தாயாரிடம் இல்லை, என கூறினார். இதனால் வெங்கடேஷ் தனது மனைவி தமிழ்செல்வியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ், தனது வக்கீல் மூலம் தமிழ்செல்விக்கு விவாகரத்து நோட்டீசு அனுப்பினார். இதனால் தமிழ்செல்வி மனவேதனை அடைந்தார். கணவர் கேட்கும் கூடுதல் வரதட்சணை பணத்தை கொடுக்க முடியவில்லையே, இனி தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் போய்விடுமே, என கருதினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழ்செல்வி தனது தாயாரிடம் புதியதாக கட்டப்படும் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் தமிழ்செல்வி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாலட்சுமி புதிதாக கட்டப்படும் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு தமிழ்செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 15 மாதங்களே ஆனதால் மேட்டூர் உதவி கலெக்டர் லலிதா விசாரணை நடத்தினார். இதற்கிடையே வெங்கடேசும், தாயார் ராணியும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வரதட்சணை கொடுமையால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story