காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வினாடிக்கு 400 கனஅடிக்கும் குறைவாக தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. இதனால் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகள் வெறும் பாறைகளாக காட்சி அளித்தன. மேலும் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இந்த நீர் வரத்து நேற்று காலை 10 மணி அளவில் வினாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது.

இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் தண்ணீர் வரத்தை மத்திய நீர்வள அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கோடை விடுமுறையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலம், நடைபாதை, முதலை பண்ணை, மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். 

Next Story