இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஐ.எஸ். அமைப்பை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்


இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஐ.எஸ். அமைப்பை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2019 5:00 AM IST (Updated: 24 April 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஐ.எஸ். அமைப்பை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். 500–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மி‌ஷன்வீதியில் உள்ள ஜென்மராக்கினி கோவில் முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் வைத்திலிங்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூர வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 310 பேர் பலியாகி உள்ளனர். 500–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பெரும்பாலும் வெளிநாட்டு பயணிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு உலகத்தையே உலுக்கியுள்ள சம்பவமாகும். பல நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் அது மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ். அமைப்பை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் கடவுளை பிரார்த்திக்கிறேன். புதுவை அரசை பொறுத்தவரை எங்களால் முடிந்த வரை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல் மகளிர் காங்கிரஸ் சார்பில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு பழைய பஸ்நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


Next Story