திருக்கனூர் பகுதியில் இடி –மின்னலுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
திருக்கனூர் பகுதியில் இடி– மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்கனூர்,
புதுவையில் கடந்த சில மாதங்களாக மழை இன்றி வறண்ட வானிலை நிலவுகிறது. தற்போது கோடை வெயிலும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் பல பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் புதுவையில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. முதலில் லேசாக பெய்த மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டியது. சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மழை நின்றதும் ஒரு மணிநேரத்துக்கு பின் மின் வினியோகம் வழங்கப்பட்டது. திடீர் மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. கோடை மழை பெய்ததால் பூமி குளிர்ந்து, வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்கனூர் கடைவீதியில் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. புதுவையில் நள்ளிரவில் தூறல் மழை பெய்தது.