நத்தம் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நத்தம்,
நத்தம் ஒன்றியம் வேலம்பட்டி ஊராட்சியில் சேர்வீடு, துவராபதி, ராக்காச்சிஅம்மன் கோவில் தெரு, அண்ணாநகர், அசோக்நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் 2 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்ததால் ஒரு வாரத்துக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையொட்டி குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் காலிக் குடங்களுடன் நேற்று நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து நத்தம் தாசில்தார் ஜான் பாஸ்டின் டல்லஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அந்தோணியார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திவான் மைதீன், வசந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்குவதாக உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story