மாவட்டத்தில் பலத்த மழை, வாழை, தென்னை, பாக்கு மரங்கள் சாய்ந்து சேதம் - ஆத்தூரில் 98.6 மி.மீ. மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் சாய்ந்து சேதமானது. அதிகபட்சமாக ஆத்தூரில் 98.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.
சேலம்,
தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனர். இந்தநிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
இதேபோல் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் பொங்கவாடி கிராமத்தில் ஏராளமான பாக்கு, தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் டேனீஷ்பேட்டை, தும்பிப்பாடி, காடையாம்பட்டி, காமலாபுரம், பொட்டியபுரம், பண்ணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்து சேதமானது.
நாகலூர் பகுதியில் பெருமாள் கோவில் கரட்டில் ஓடைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணை உடைந்தது. இதனால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்களில் பெருக்கெடுத்து ஓடியது. மழையினால் விவசாயி ஒருவரின் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்தது. மேலும் ஆட்டுப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததால் 2 ஆட்டுக்குட்டிகள் தண்ணீரில் மூழ்கி செத்தன.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 98.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
தம்மம்பட்டி-58.4, சங்ககிரி-56, கெங்கவல்லி-52.4, மேட்டூர்-51.4, ஓமலூர்-23.4, கரியகோவில்-19, ஆணைமடுவு-17, சேலம்-13.8, காடையாம்பட்டி-9.6, ஏற்காடு-9.4, எடப்பாடி-3, பெத்தநாயக்கன்பாளையம்-2.
Related Tags :
Next Story