மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை, 100 ஏக்கரில் பயிரிட்டிருந்த கரும்பு சேதம் - விவசாயிகள் கவலை


மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை, 100 ஏக்கரில் பயிரிட்டிருந்த கரும்பு சேதம் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 24 April 2019 4:30 AM IST (Updated: 24 April 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் கரும்பு சேதமானது.

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கடுவனூர், பாக்கம், புதூர், கானாங்காடு, வடபொன்பரப்பி, லக்கிநாயக்கன்பட்டி, ராவத்தநல்லூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கரும்பு பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது அந்த கரும்புகள் நல்ல முறையில் செழித்து வளர்ந்து காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக நேற்று முன்தினம் மாலை சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிக்குட்பட்ட கிராமங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் புதூர், கடுவனூர், பாக்கம், ராவத்தநல்லூர் ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கானாங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், மனைவியின் நகையை அடகு வைத்து 5 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தேன். கடும் வறட்சியிலும் கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சி அதனை நல்ல முறையில் பராமரித்து வந்தேன்.

நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சாகுபடி செய்திருந்த பெரும்பாலான கரும்புகள் சாய்ந்து விழுந்து சேதமடைந்து விட்டன. இதேபோல் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்குட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் என்னை போன்ற விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆகவே மழையால் சேதமடைந்த கரும்பு பயிருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றார். 

Next Story