திடீர் கோளாறால் பரபரப்பு, ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்களை பராமரிக்கும் நிறுவனத்துக்கு நோட்டீஸ் - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது


திடீர் கோளாறால் பரபரப்பு, ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்களை பராமரிக்கும் நிறுவனத்துக்கு நோட்டீஸ் - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 25 April 2019 4:00 AM IST (Updated: 24 April 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பராமரிப்பு பணியை ஏற்றுள்ள தனியார் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில்(ஜி.சி.டி.) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளின் நுழைவு வாயில்கள், வராண்டாக்கள் மற்றும் பின்பகுதியில் மொத்தம் 144 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல கேமராக்களில் நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டு காட்சிகள் தெரியவில்லை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான ராஜாமணி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தெரியும் டி.வி.க்களோடு இணைக்கும் வயர்கள் சரியில்லாதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 மணி நேரம் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றன. தற்போது ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் அனைத்தும் சரியாக செயல்படுகின்றன.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து பராமரிப்பு பொறுப்பை ஏற்றுள்ள தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மாவட்ட கலெக்டர் மூலம் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக சரி செய்யப்படாததற்கு காரணம் கேமராக்களை பராமரிக்கும் பொறுப்பை வெளிமாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் சிலர் கூறியதாவது:-

கோவை உள்பட சில மாவட்ட ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் கொடுத்துள்ளது. அந்த நிறுவனத்தினர் தான் பராமரிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கேமராக்களை பொருத்தி விட்டு பராமரிப்பிற்காக ஒரு ஆளை மட்டும் நியமித்து விட்டு சென்று விட்டனர். கோளாறு ஏற்பட்டவுடன் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பராமரிப்பு பொறுப்பை ஏற்றுள்ள நிறுவன ஊழியரிடம் விசாரித்த போது அவரால் அந்த கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து அந்த நிறுவன உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் ½ மணி நேரம் கழித்து 2 ஊழியர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வந்தும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. அவர்களால் என்ன கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன்பின்னர் உள்ளூரில் இருந்து சில தொழில்நுட்ப பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தான் கோளாறை சரி செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் பதிவாகின்றன. ஆனால் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள டி.வி.க்களில் தான் காட்சிகள் தெரியவில்லை என்பது தெரியவந்தது.

பூத் சிலிப் போன்று ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியையும் தேர்தல் கமிஷன் தனியார் நிறுவனத்துக்கு விட்டது தான் குழப்பத்துக்கு காரணம். தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சகஜம். ஆனால் என்ன கோளாறு என்று உடனடியாக கண்டுபிடித்து அதை சரி செய்வது தான் முக்கியம். ஆனால் ஒரே நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் கேமரா பராமரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளதின் மூலம் அவர்களால் பராமரிப்பு வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை. இதையே உள்ளூர் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தால் அந்த கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு இருக்கும். இனிமேலாவது பராமரிக்கும் வேலைக்காக தனியாக ஊழியர்களை 24 மணி நேரமும் அங்கேயே இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கண்காணிப்பு கேமராக்களில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை ஓட்டு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தின் நுழைவு வாயில் மற்றும் அதை சுற்றிலும் முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், 2-வது அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், மூன்றாவது அடுக்கில் சிறப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வரும் அரசு மற்றும் போலீஸ் வாகனங்கள் கூட மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே போலீசார் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஓட்டு எண்ணும் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை சுற்றிலும் இரவில் அதிக பிரகாசமான விளக்குகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Next Story